தினத்தந்தியில் வந்த லாரி பேக்கர் பற்றிய செய்தி
சொந்த வீட்டை கட்டமைப்பதற்கு பலரும் பலவாறு திட்டமிடுவார்கள். பலருடைய வீட்டு வடிவமைப்பு முறைகளை அலசி ஆராய்ந்து அதில் இருந்து மாறுபட்டதாக தம்முடைய வீடு அமைய வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஆனால் கட்டுமானத்திற்கு ஆகும் செலவு அந்த ஆசையை கட்டுப்படுத்தி விடும். அதிலும் கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே இருக்கும் சூழலில் திட்டமிட்டபடி வீட்டை கட்டிமுடிப்பது என்பது பலருக்கும் சவாலான விஷயமாகவே இருக்கிறது. தாங்கள் போட்டிருக்கும் பட்ஜெட் தொகையை விட அதிக அளவில் செலவு செய்ய நேரிடும்போது சில சமயம் அது கட்டுமான பணியையும் பாதிப்படைய செய்துவிடுகிறது. அதனால் பலரும் கட்டுமான பணியை எவ்வளவு சிக்கனமாக முடிக்க முடியுமோ அதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். அதற்கேற்ப கட்டுமான செலவை கட்டுப்படுத்தும் வகையிலான தொழில்நுட்பங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அது குறித்து பார்ப்போம். * கட்டுமானத்தின் முதல் அஸ்திரமான அஸ்திவாரம் அமைக்கும் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். மண்ணின் தன்மையை அறிந்து அதற்கேற்ப அஸ்திவாரத்தை எவ்வளவு ஆழத்துக்கு அமைக்கலாம் என்பதை முடிவு செய்ய வேண்டும். ஏனெனில் கட்டுமானத்துக்கு ஆகும் மொத்த செலவில் அஸ்திவாரம் அமைப்பதற்கு 10 முதல் 15 சதவீதம் வரை ஒதுக்க வேண்டியிருக்கும். அஸ்திவாரம் அமைப்பதற்கு ஆர்ச் பவுண்டேஷன், அண்டர் ரீம் பைல் பவுண்டேஷன் உள்ளிட்ட முறைகள் பிரதானமாக இருக்கிறது. நாம் கட்டுமானத்தை எவ்வளவு உயரத்துக்கு எழுப்பப்போகிறோம் என்பதை கணக்கிட்டு அதற்கேற்ப அஸ்திவாரத்தை ஆழப்படுத்த வேண்டும். எனினும் எதிர்கால தேவையை கவனத்தில் கொண்டும் அஸ்திவாரம் பலமாக அமையப்பெற வேண்டும். * கட்டுமானத்தின் அடிப்படை தேவையான செங்கல், ஜல்லி, மணல், கதவுகள்–ஜன்னல் அமைக்க தேவைப்படும் மரம் முதலிய பொருட்களை தொலைதூரத்தில் இருந்து வரவழைக்காமல் அருகிலேயே கிடைக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அவை கட்டுமான செலவை பெருமளவில் குறைப்பதற்கு துணை புரியும். லாரி பேக்கர் தொழில்நுட்பத்தில் கட்டமைக்கப்பட்ட வீடுகளுக்கு அருகில் கிடைக்கும் கட்டுமான பொருட்களே பிரதானமாக பயன்படுத்தப்பட்டது. * சுவர்கள் அமைப்பதற்கு எலிப்பொறி தொழில்நுட்பத்தை கையாளலாம். இதன் மூலம் செங்கற்களை வரிசையாக அடுக்கி சுவர் எழுப்புவது தவிர்க்கப்படுவதுடன் சுவற்றிற்கு இடையே போதுமான இடைவெளி கிடைக்கும். அதன் மூலம் செங்கற்களின் தேவை குறையும் என்பதுடன் சுவர்களின் உறுதி தன்மை அதிகரிக்கும். செலவும் குறையும். * செங்கற்களுக்கு பதிலாக நிறைய மாற்று செங்கற்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. பிளை ஆஷ் கற்கள் பல இடங்களில் பயன்படுத்தப்படுகின்றன. அவை எடை குறைவாக இருந்தாலும் வலிமையானவை. கட்டிடத்தின் பாரத்தை குறைப்பதற்கும் துணைபுரிகின்றன. கட்டுமான செலவையும் குறைக்கின்றன. ரெடிமேட் சுவர்களும் பயன்பாட்டுக்கு வந்திருக்கின்றன. * ஆற்றுமணலுக்கு பதிலாக செயற்கை மணலை பயன்படுத்தலாம். அவையும் கட்டிடத்தின் உறுதி தன்மையை தக்க வைப்பதில் துணைபுரிகின்றன என்பது கட்டுமான பொறியாளர்களின் கருத்தாக இருக்கிறது. மேலும் மணலுக்கு கட்டுமான பட்ஜெட்டில் பெரும் தொகை ஒதுக்க வேண்டியிருக்கும். இந்த செயற்கை மணலை பயன்படுத்தும்போது கட்டுமான செலவை வெகுவாக குறைக்கலாம். * கட்டிடத்தின் மேற்கூரை அமைப்பதிலும் பல தொழில்நுட்ப முறைகள் கையாளப்படுகின்றன. பில்லர் ஸ்லாப், ஜாக் ஆர்ச் போன்றவற்றை பயன்படுத்தும்போது கான்கிரீட்டின் பயன்பாட்டை வெகுவாக குறைக்கலாம். ஏனெனில் வழக்கமான ஆர்.சி.சி. ஸ்லாப் முறை மூலம் மேற்கூரை அமைக்கும்போது கான்கிரீட் வீணாவதுடன் கட்டிடத்தின் பாரமும் அதிகரிப்பதாக இருக்கும். அப்படியிருக்கையில் எடை குறைவான தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்தி மேற்கூரை அமைப்பதன் மூலம் கட்டுமான செலவையும் குறைக்கலாம். அதன் மூலம் சுவர்கள் வழியே அஸ்திவாரத்திற்கு அழுத்தம் கொடுப்பதும் குறையும். குறிப்பாக பில்லர் ஸ்லாப் முறையை பயன்படுத்தி மேற்கூரை அமைக்கும்போது 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை கட்டுமான செலவை கட்டுப்படுத்தலாம். * ஜன்னல்களின் மேற்பகுதியில் கான்கிரீட் கலவை கொண்டு ஸ்லாப் அமைப்பதற்கு பதில் ரெடிமேட் ஸ்லாப்புகளை பயன்படுத்தலாம். அவை எடை குறைவாக இருக்கும். ஜன்னலை தாங்கி நிற்கும் கட்டுமான பாரமும் குறையும். செலவையும் கட்டுப்படுத்தலாம்.